News

ஈரான் – அமெரிக்க போர்நிறுத்த நீடிப்பு: தங்கம் விலை உயர்வு

ஈரானுடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா நீடித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் தணிந்ததாலும் இன்று (22) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஸ்பொட் தங்கம் (Spot gold) 0.9 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,755.11 டொலராகப் பதிவாகியுள்ளது. முன்னதாக நேற்று (21) ஏப்ரல் 13 ஆம் திகதிக்குப் பின்னரான மிகக்குறைந்த விலையைத் தங்கம் எட்டியிருந்தது. இதேவேளை, ஜூன் மாத விநியோகத்திற்கான அமெரிக்க தங்க எதிர்கால விலை (U.S. gold futures) 1.1 சதவீதம் உயர்ந்து 4,772.90 டொலராகக் காணப்பட்டது.

ஈரானுடனான போர்நிறுத்தம் முடிவடையச் சில மணிநேரங்களே இருந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அதனை காலவரையறையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதுடன், டொலரின் மதிப்பு மற்றும் எண்ணெய் விலைகள் சரிவைச் சந்தித்தன.

பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து பணவீக்கத்தைத் தூண்டும். தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பு முதலீடாகக் கருதப்பட்டாலும், வட்டி விகிதங்கள் உயரும்போது வட்டி ஈட்டித்தரும் ஏனைய முதலீடுகள் கவர்ச்சிகரமானதாக மாறுவதால் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. தற்போது போர்நிறுத்த நீடிப்பால் நிலவும் சூழல் தங்கத்தின் விலைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button