Sri Lanka News

பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச் சீற் பயன்படுத்த தடை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கை அமுலுக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை மீறி செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக நேரடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் நகரசபையின் தவிசாளருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இடைநிறுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய பேப்பர் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், பயன்பாட்டிற்கு கொள்வனவு செய்யப்படும் இறைச்சி வகைகளை நகரசபைக்கு உட்பட்ட இறைச்சி கடைகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் தெரிவித்துள்ளார்.

‎   

Related Articles

Back to top button