Sri Lanka News

நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு – விசேட நிபுணர் எச்சரிக்கை

நாட்டில் சிறுநீரக நோய்களுக்கு ஆளாகும் மக்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு பெரிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும் சிறுநீரக நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நாலக ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுநீரக தினத்தை முன்னிட்டு அண்மையில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

சிறுநீரக நோய்கள் பொதுவாக நாட்பட்ட நோய்களாகும், நோய் தீவிரமடையும் போது சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆரம்ப நிலையில் இந்நோய்க்கான தெளிவான அறிகுறிகள் தெரியாததால், நோய் தீவிரமடைந்த பின் மட்டுமே அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

குறிப்பாக, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் சுமார் 25 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர் குருதியழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு நோய்களும் சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்றும், அப்போது முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் நோய் தீவிரமடைந்தால், இரத்த சுத்திகரிப்பு (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகும் என்றார்.

தற்போது நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 10 சதவீதமானோர், அதாவது 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நோய் கண்டறியப்படாத பலரும் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

Related Articles

Back to top button