போதைப்பொருளுக்கான தீர்வு பல வேலைத்திட்டங்களில் தங்கியுள்ளது

“நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் கண்கூடான பெறுபேறுகள் எட்டப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை முகாமைத்துவம் செய்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்கான 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டம் (SUD) குறித்த தெளிவுபடுத்தல் சந்திப்பு, நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் எதிர்நோக்கும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டு, முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
சான்றுகள் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகிய சேவைகளைப் பலப்படுத்துவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.






