Sri Lanka News

200kg போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு

கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்கள், இன்று வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் வைத்து அழிக்கப்பட்டன.

அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 வழக்குகளுக்குரிய சான்றுப் பொருட்களும் இதன்போது அழிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் நிறைவடைந்த போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டன.

இவ்வாறு அழிக்கப்பட்டவற்றில் 40 கிலோ 539 கிராம் ஹெரோயின், 132 கிலோ கெத்தீன் போதைப்பொருள், 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள் அடங்குவதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக்க தர்மசேனவின் மேற்பார்வையில், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் இவை வனாத்தவில்லுவ தகன சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள், பலபிட்டிய நீதவான் மற்றும் புத்தளம் மேலதிக நீதவான் ஆகியோரின் மேற்பார்வையில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் அதிகாரிகளினால் தீயிட்டு அழிக்கப்பட்டன.

Related Articles

Back to top button