Sri Lanka News

பொருளாதார, சமூகதாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசர அழைப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் மற்றும் அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாரிய பொருளாதார, சமூகத் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசர விசேட கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளுமாறு சஜித் பிரேமதாசவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களின் உயிர்ப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வான்வழிப் போக்குவரத்து, விநியோகச் சங்கிலி மற்றும் எரிபொருள் இறக்குமதி ஆகியவற்றில் இப்போர் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் குறைவடைதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தமது ஆலோசனைகளை முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசேட கூட்டத்தின் ஊடாக எட்டப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்தில் அரசாங்கம் எவ்வாறான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தமது பொதுவான நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button