Sri Lanka News

முன்பள்ளி முறைமை வேலைத்திட்ட்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த முன்பள்ளி முறைமையையும் ஒழுங்குபடுத்தக்கூடிய வகையிலான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026.02.02ஆம் திகதி மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, ‘மேல் மாகாண முன்பள்ளிகளைத் தரப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகாட்டலை வழங்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தரப்படுத்தல் மாதிரிப் படிவத் தொகுதிகளைப் பெற்றுக்கொடுக்கும் விழாவில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

முன்பள்ளிகளைத் தரப்படுத்தப்பட்ட முறையில் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வழிகாட்டி நூல் தொகுதிகளை ஆசிரியர்களுக்கு வழங்கும் நிகழ்வு பிரதமரின் தலைமையில் இங்கு இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

அரசாங்கம் என்ற வகையில் பிள்ளைகளுக்குக் கிடைக்கின்ற ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியானது, ஸ்திரத்தன்மை, தரம், பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் பிள்ளைக்குக் கிடைக்கும் நற்பண்புகள் ஆகியன தேசிய கல்வி இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். அதற்காக மேற்கொள்ள வேண்டிய தலையீடுகளை நாம் முன்னெடுப்போம்.

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் ஆரம்பக் கல்விக்குப் பிரவேசிப்பதற்கு முன்பள்ளிக் கல்வி என்பது ஒரு கட்டாயக் காரணியாக நாம் கருதுகின்றோம். ஆகையினால் முன்பள்ளி ஆசிரியர்களாக நீங்கள் ஆற்றிவரும் பணியின் தரத்தை மேலும் வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்தினால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம், எனத் தெரிவித்தார்.

மேல் மாகாண சபையின் தலைமையில், மேல் மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க ஆகியோரும், மேல் மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button