இந்திய அணி தேர்வில் சர்ச்சை! சூர்யவன்ஷி புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த முகமது கைஃப்!

இந்திய அணி தேர்வில் சர்ச்சை! சூர்யவன்ஷி புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த முகமது கைஃப்
அயர்லாந்துடனான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில், வளர்ந்து வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்காத இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை, முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 776 ஓட்டங்களைக் குவித்து, 237.30 என்ற அதிரடியான ஓட்ட வேகத்துடன் ஓரஞ்சு தொப்பியை வென்ற வைபவ் சூர்யவன்ஷி, இந்தத் தொடரில் அறிமுகமாவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் சிதஞ்சு கோடக் தொடருக்கு முன்பே தெளிவுபடுத்தியிருந்தார்.
தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் தடுமாறிய நிலையில், சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்காத இந்திய அணியின் முடிவு பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் அயர்லாந்திடம் தோல்வியடைந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்
இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்ட முகமது கைஃப், “உலகக் கிண்ணத்தை வென்ற அணி என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த விடயம் மற்ற வீரர்களுக்குப் பொருந்தவில்லையா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ரோகித் சர்மா செம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பிறகும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனக்கூறி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதேபோல, இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்தே நீக்கப்பட்டார். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாகக் கூறும் அணி நிர்வாகம், சூர்யகுமார் யாதவை விட சிறந்த எதிர்காலத்தை வைபவ் சூர்யவன்ஷியிடம் காண்கிறதா?” என கைஃப் காட்டமாக வினவியுள்ளார்.
தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் வீரர்களின் தெரிவு குறித்து இந்திய அணி நிர்வாகம் எதிர்கொள்ளும் இத்தகைய விமர்சனங்கள், தற்போதைய இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.




