Sri Lanka News

பலத்த மழையால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை வெளியேறும் வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், போக்குவரத்துச் நெரிசலை விரைவாக வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக இன்று (22) காலையில் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீட்டர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related Articles

Back to top button