ஆஸி. அணிக்காக களமாடியஇந்திய வம்சாவளி வீரர்நிஷான் வேலுப்பிள்ளை

நடப்பு ஃபிபா கால்பந்து உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை விளையாடினார்.
குரூப்-டி பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துருக்கி அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா விளையாடியது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலிய வெற்றி பெற்றது.
கனடாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்த வெற்றி மூலம் துருக்கி அணிக்கு அவுஸ்திரேலியா அதிர்ச்சி கொடுத்தது.
ஆட்டத்தின் 27 மற்றும் 75-நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தினர் அவுஸ்திரேலிய அணி வீரர்கள். இதன் மூலம் இந்த தொடரை வெற்றியுடன் ஆஸி தொடங்கி உள்ளது. இந்த ஆட்டத்தில் அஸ்திரேலிய அணிக்காக முதல் கோலை பதிவு செய்த நெஸ்டரி இரங்குண்டாவுக்கு மாற்று வீரராக நிஷான் வேலுப்பிள்ளை களமிறங்கினார்.
முன்கள வீரரான அவர், இந்த ஆட்டத்தில் தடுப்பாட்டம் ஆடினார். அது அணி நிர்வாகம் அவருக்கு கொடுத்த ஆலோசனை என தெரிகிறது. கடந்த 2024 இல் சர்வதேச கால்பந்து அரங்கில் அவுஸ்திரேலிய அணிக்காக அவர் அறிமுகமானார்.
சீனாவுக்கு எதிரான ஃபிபா உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் அவர் அறிமுகமானார். முதல் ஆட்டத்தில் கோல் பதிவு செய்து அசத்தினார். இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக 8 சர்வதேச போட்டிகளில் விளையாடி, மூன்று கோல்களை பதிவு செய்துள்ளார். அதன் மூலம் நடப்பு உலகக் கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெற்றார்.
25 வயதான நிஷான் வேலுப்பிள்ளையின் தந்தை மலேசியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தாயார் ஆங்கிலோ இந்தியர். அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிறந்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பதால் நிஷான் வேலுப்பிள்ளையும் கவனம் ஈர்க்கிறார். தமிழ் வம்சாவளி வீரர் ஒருவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருப்பது முதல் முறை.




