Sri Lanka News

இலங்கையில் 237 மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம அவசர எச்சரிக்கை!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், சுத்தமான குடிநீரை, குறிப்பாக கொதித்து ஆறிய நீரை அருந்துமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி தபரேரா, இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களிடையே வைரஸ் மூளைக்காய்ச்சல் தொற்றுகள் பரவியிருக்கலாம் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.

முதல் நோய்த்தொற்றுகள் ஏப்ரல் 15 அன்று மாத்தறை, தெனியாயாவில் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ரிக்கிலகஸ்க, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியதலாவை ஆகிய இடங்களிலிருந்தும் கூடுதல் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

பதிவுசெய்யப்பட்ட தொற்றுகளில் பெரும்பாலானவை பாடசாலை மாணவர்களிடையே காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நேற்று (மே 31) நிலவரப்படி, 59 நோயாளிகள் மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர், மீதமுள்ளவர்கள் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நோயுடன் தொடர்புடைய முதன்மை அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். பெரும்பாலான நோயாளிகளுக்கு வைரஸ் மூளைக்காய்ச்சல் பொதுவாக சில நாட்களுக்குள் குணமாகிவிடும் என்றும் வைத்தியர் துஷானி தபரேரா விளக்கினார்.

நோய்ப் பரவலை விசாரிக்கவும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் அதிகாரிகள் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளனர்.

மேலும், அசுத்தமான குடிநீர் ஆதாரங்கள் நோய் பரவுவதற்கான ஒரு சாத்தியமான காரணியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு, சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்களும் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறுவர்கள் ஒருவருக்கொருவர் உணவைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும், அனைத்து நேரங்களிலும் சுத்தமான, கொதிக்கவைத்து ஆறவைத்த நீரைப் பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button