Sri Lanka News

நிந்தவூர் கலாச்சார மண்டபப் பணிகள் துரிதப்படுத்தல்; சட்ட ஆவணங்கள் ஒப்படைப்பு

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறித்த கட்டிடத்திற்கான சட்ட ரீதியான ஆவணங்கள் இன்று (22) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அநுபமா மங்கள விக்ரமராச்சி அவர்கள், ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கரையோர பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, மாவட்ட அரசாங்க அதிபர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், மாகாண கட்டிடத் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் திருமதி ஆர். நிரோஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குழுவினர் இணைந்து கட்டிடத்தினை நேரடியாகப் பார்வையிட்டனர்.

பார்வையிடும் நிகழ்வின் போது, திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், கலாச்சார மண்டபத்தின் பணிகளை நிறைவு செய்ய தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை, திட்டம் விரைவில் நிறைவேறும் வாய்ப்பு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்து வெளியிட்டனர்.

நிந்தவூர் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வரும் இக்கலாச்சார மண்டபம், நிறைவு பெற்ற பின்னர் பிரதேசத்தின் சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு முக்கிய கட்டிடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button