சர்வதேச கார் பந்தயத்தில் சாதனை படைத்த அஜித்குமார் ரேசிங் அணி!

பெல்ஜியத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்பா-பிராங்கோசாம்ப்ஸ் ஓடுதளத்தில் நடைபெற்ற ’24H சீரிஸ்’ கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் தலைமையிலான ‘அஜித்குமார் ரேசிங்’ அணி மிகச்சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. மொத்தம் 24 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த சவாலான பந்தயத்தில், GT3 Pro-Am பிரிவில் களம் இறங்கிய அஜித்தின் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
சர்வதேச அரங்கில் அஜித் குமார் ரேசிங் அணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்தயத்தின் தொடக்கம் முதலே சீரான வேகத்தையும் திறமையையும் வெளிப்படுத்திய அந்த அணி, உலகின் முன்னணி வீரர்களுக்கு இணையாகப் போட்டியிட்டு இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது. திரைத்துறையைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் அஜித் கொண்டுள்ள தீவிர ஆர்வத்திற்கு இந்த வெற்றி ஒரு மகுடமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அஜித் குமார் ரேசிங் அணி சர்வதேச கார் பந்தய தரவரிசையில் தனது முத்திரையைப் பதித்துள்ளது. ஸ்பா ஓடுதளத்தின் கடினமான வளைவுகளையும், காலமாற்றங்களையும் திறம்பட கையாண்டு இந்த மைல்கல்லை எட்டிய அஜித் மற்றும் அவரது குழுவினருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.




