India NewsSri Lanka News

இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை மெரைன் பொலிஸார் இன்று (18) பறிமுதல் செய்துள்ளனர்.

புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடல் மார்க்கமாகப் பொருட்கள் கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று அதிகாலை ஒரு மணியளவில் புதுமடம் மெரைன் பொலிஸாரும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, கடற்கரையில் வாகனமொன்றிலிருந்து மூட்டைகளை இறக்கிப் பதுக்கிக் கொண்டிருந்த கும்பலை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

இதைக் கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோடிய நிலையில், ஒருவரை மட்டும் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

அங்கிருந்த 35 சாக்கு மூட்டைகளைச் சோதனை செய்தபோது, அவற்றில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதானவர் புதுமடம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் (38) என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை மெரைன் பொலிஸார் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெரைன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.-

மன்னார் நிருபர் லெம்பட்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button