ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு -அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடையில் இன்று (04) காலை இடம்பெற்ற தனியார் வைத்தியசாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில், மருத்துவ பீடத்தில் இணைந்து வைத்தியராக வெளியேறும் மாணவர் ஒருவருக்காக அரசாங்கம் பாரிய தொகையைச் செலவிடுகிறது.
ஒரு பொறியியலாளரை உருவாக்குவதற்கு அரசாங்கம் சுமார் 30 இலட்சம் ரூபா வரை செலவிடுவதாகவும் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே மேலும் சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,நமது நாட்டின் சுகாதாரத் துறையை எடுத்துக்கொண்டால், எமது அரசாங்கமும் சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இலவச சுகாதாரச் சேவையை வழங்கவே சிந்தித்தன.
இப்போதும் எமது நோக்கம் மக்களுக்கு இயன்றவரை இலவச சுகாதாரச் சேவையை வழங்குவதே ஆகும்.
ஒரு நபரின் பணப்பையிலுள்ள பணத்தைக் கொண்டு அவர் வாழ்வதா அல்லது இறப்பதா என்பதை தீர்மானிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அதனால்தான் இலவச சுகாதாரச் சேவையை வலுப்படுத்த எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.
மேற்கத்திய மருத்துவக் கல்லூரிகள் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கே அதிக வரிப்பணம் செலவிடப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் நுழையும் மருத்துவ மாணவர் ஒருவர் ஐந்து வருடங்களின் பின் வெளியேறுவதற்காக இந்நாட்டு மக்கள் 60 இலட்சம் ரூபாவைச் செலவிடுகின்றனர்.
ஒரு பொறியியலாளரை உருவாக்க நாம் செலவிடுவது 30 இலட்சம் ரூபா மட்டுமே.வரி செலுத்தும் மக்கள் அதைவிட இரண்டு மடங்கு தொகையை வைத்தியர்களுக்காகச் செலவிடுகின்றனர்.
நமது நாட்டில் 35,000 முதல் 38,000 வரையான வைத்தியர்கள் உள்ளனர், அவர்களில் சுமார் 25,000 முதல் 28,000 பேர் வரை அரசு வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் சமூகத்தில் ஒரு விசேட பொறுப்பைக் கொண்டவர்கள், இவர்களிடமிருந்து சமூகம் ஒரு விசேட சேவையை எதிர்பார்க்கிறது என தெரிவித்தார்.




