சஞ்சு சம்சன் ஒரு ரியல் ஹீரோ! – மோடி புகழாரம்

டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சஞ்சு சம்சனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கேரளாவில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்தியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
“கேரள மக்களுக்கு சஞ்சு சம்சனின் ஆட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.
உலகக் கிண்ணத் தொடரின் முக்கியமான போட்டிகளின் போது அவரது கவனம், நம்பிக்கை மற்றும் வேகம் உச்சத்தைத் தொட்டது.
அணியின் தேவை என்ன என்பதை உணர்ந்து விளையாடும் ஒரு நிஜமான வீரருக்கு இதுவே அடையாளம்,” என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சஞ்சு சம்சன், 2014 இல் விராட் கோலி படைத்த சாதனையை (319 ஓட்டங்கள்) முறியடித்து, ஒரு டி20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 97*, அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 மற்றும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 89 ஓட்டங்களைக் குவித்தார்.
அத்துடன் தொடரின் நாயகன் (Player of the Tournament) விருதையும் சஞ்சு சாம்சன் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.




