Sri Lanka News

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரை பாதுகாக்க விசேட திட்டம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலப்பகுதியில் அரிசியை மறைத்து வைத்திருந்தமை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் 170க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 5,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்போது சில பொருட்களின் விலைகளில் உயர்வு காணப்படுவதாகவும், எனினும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இறக்குமதியாளர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தனியார் துறையினரால் விநியோகிக்கப்படும் எரிவாயுவில் தற்பொழுது சிறியளவு தட்டுப்பாடு நிலவிய போதிலும், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும், அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதற்கான உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி எரிவாயுவை மறைத்து வைக்க வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related Articles

Back to top button