Sri Lanka News

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.

இதன்படி திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆம் பிரிவுகளின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அமைச்சர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2489/48) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள விளையாட்டுச் சங்கங்கள் வருமாறு:

இலங்கை கைப்பந்து சங்கம் (Handball)

இலங்கை கெரம் சங்கம் (Carrom)

இலங்கை ஹொக்கி சங்கம் (Hockey)

இந்த விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகம் மற்றும் ஏனைய அத்தியாவசிய நடவடிக்கைகளைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்காக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் “தகுந்த அதிகாரியாக” நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் 2026 மே 19 முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய யாப்புகளை திருத்தும் செயல்முறையை முழுமையாக்குதல் மற்றும் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செயல்முறையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்தல் ஆகியவையே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கங்களின் திருத்தப்பட்ட யாப்புகளின் கீழ், வருடாந்தப் பொதுக்கூட்டங்களை நடத்தி, தேர்தலின் மூலம் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் வரை, அந்தச் சங்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கும் நிர்வகிப்பதற்குமான முழு அதிகாரமும் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் கையொப்பத்துடன், 2026 மே 19 ஆம் திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button