Sri Lanka News

இன்றும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு வேண்டுகோள்

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு சூரிய சக்தி மின் நுகர்வோரிடம் தேசிய மின் கட்டமைப்பு ஆபரேட்டர் தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக, நுகர்வோர் தங்களின் சூரிய மின் உற்பத்தித் தகடுகளைத் தானாக முன்வந்து தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக, நேற்றைய தினம் (30) நாட்டின் பல பகுதிகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகக் கொழும்பு உட்படப் பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகப் பதிவாகியிருந்தது.

வெசாக் பௌர்ணமி தினம் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பிற்கான மின்சாரத் தேவை, கணிக்கப்பட்ட அளவை விட மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை, சூரிய மின் உற்பத்தித் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த இரண்டு காரணங்களினாலேயே நேற்றைய தினம் தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையின்மை ஏற்பட்டது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, நேற்றைய தினமும் பிற்பகல் 3.00 மணி வரை கூரைகளில் சூரிய மின் உற்பத்தித் தகடுகளைக் கொண்டுள்ள உரிமையாளர்களை, அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button