ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் நிதி மோசடி சர்ச்சை – துபாய், சென்னை சம்பவங்கள் குறித்து விளக்கம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிற்கு மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றம் மற்றும் சென்னை அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நேற்று (16) வெளியிடப்பட்ட அறிக்கையில், துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, போலியான மின்னஞ்சல் வழியாக வழங்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை நம்பி, 974,000 திர்ஹாம் தொகை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை அலுவலகத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, அங்கு பணியாற்றிய நிதிப் பிரிவு இந்திய ஊழியர்கள் குழுவொன்றே இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வணிக விலைப்பட்டியல்களின் கையொப்பங்கள் மற்றும் பணச்செலுத்தல் ஆவணங்களை போலியாக மாற்றியமைத்து, நீண்டகாலமாக சுமார் 22 மில்லியன் இந்திய ரூபாய் தொகையை முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.




