Sri Lanka News

இலங்கை ரூபாய்! ‘புளூம்பெர்க்’ வெளியிட்ட அதிரடி அறிக்கை!

இந்த மாதத்திற்குள் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியுள்ளதாக ‘புளூம்பெர்க்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் முன்னணி வணிக இணையதளமான புளூம்பெர்க், இலங்கை ரூபாய் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, அது மேலும் குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தளவுக்கு பெருமளவில் வீழ்ச்சியடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான ஆபத்தாக முடியும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பணவீக்கம் பெருமளவில் உயரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ரூபாயின் இந்த வீழ்ச்சி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்றும், இதற்கு அனைவரும் வலுவாக முகம்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button