Sri Lanka News

பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (26) அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி, இலங்கையின் இனிப்பு வகை உற்பத்தித் துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் மற்றும் அதனை முகாமைத்துவம் செய்வது குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இந்த சந்திப்பை அழைத்திருந்தார்.

நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரிப்பை தற்போதைய சூழலில் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகளாவிய பாதிப்புகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் அதேவேளை நுகர்வோர் பாதிக்கப்படுவதை குறைக்கும் வகையில் செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

அங்கு கருத்து வௌியிட்ட சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியப்பெரும, கடந்த காலங்களில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், கொவிட் காலத்திற்குப் பின்னர் விலைகளை அதிகரிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

மார்ச், ஏப்ரல், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இத்துறைக்கு சிறந்த விற்பனை காலங்களாகும்.

தற்போது புத்தாண்டு காலத்திற்கான உற்பத்திகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, எத்தகைய நெருக்கடிகள் வந்தபோதிலும் புத்தாண்டு காலம் முடியும் வரை விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்திற்குப் பின்னர் எரிவாயு, மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button