Sri Lanka News

மின் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்! NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40 சதவீத சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதில் 59 கோரிக்கைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டன. எஞ்சிய 5 கோரிக்கைகளில் 3 விடயங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டது.

தற்போது நிலுவையிலுள்ள இறுதி இரண்டு கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை வழங்கிய அதே போனஸ் கொடுப்பனவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவாக 11,000 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையும் சேர்த்து சராசரியாக 17,000 ரூபா வழங்கப்படுகின்றது.

40 சதவீத சம்பள உயர்வு என்பது மாதத்திற்கு 1.8 பில்லியன் ரூபா மேலதிக செலவாகும், இது ஆண்டொன்றுக்கு 22 பில்லியன் ரூபாவாகும்.

2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி மின்சார சபையின் நட்டம் 35 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்தினால், மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சுமையை ஏற்றி மின் கட்டணத்தை 100 சதவீதமாக அதிகரிக்க வேண்டியிருக்கும்.

2024 ஓகஸ்ட் முதல் நிலவிய 25 சதவீத சம்பள முரண்பாடு களையப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஏற்கனவே 25 சதவீத உயர்வைப் பெற்றிருந்த நிலையில், கீழ்நிலை ஊழியர்களுக்கு 7 சதவீதம் – 10சதவீதம் மாத்திரமே கிடைத்திருந்தது.

இது 2025 ஜனவரி 1 முதல் சீர்செய்யப்பட்டது. தற்போது இச்சலுகையை 2024 ஜனவரி முதல் அமுல்படுத்தக் கோருகின்றனர். இது அமைச்சரவை தீர்மானம் என்பதால், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த வேலைநிறுத்தம் தொடர்கிறது என்பது புரியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button