Sri Lanka News

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விசேட பெற்றோர் கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் விசேட பெற்றோர் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட பெற்றோர் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்தியத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் யூ.எல்.எம். இப்னு அசார் கலந்து கொண்டார்.

அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி. இந்துக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், ஏராளமான மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமைக்கான காரணம் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் இந்தப் பிரதேசத்தில் மாணவர்களின் பங்கு அதிலும் ஆண் மாணவர்களின் பங்கு மிக மிகக் குறைவாகக் காணப்படுகின்றது என்பது சம்பந்தமாகவும் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொள்கின்ற போது மாணவர்கள் அவர்களது உண்மையான செயற்பாடுகளைச் செய்யாது; அர்ப்பணிப்போடு பங்குபற்றாது ஒரு சில மாணவர்கள் ஏனோதானோ என்று கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் இவர்களுக்கு இவர்களின் பெற்றோர்களும் எந்தவிதமான ஒத்துழைப்புகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்காமல் ஒரு சில பெற்றோர்கள் இருப்பதாலும் அந்த ஒரு சில பெற்றோர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் அறிவூட்டுவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பொதுவாக பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு மாணவர்களை விடுமுறை எடுக்காமல் அனுப்புவதில் இருந்து பாடசாலையில் மாணவர்கள் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடு படுகின்றார்களா? என்பது சம்பந்தமாகவும் அவர்களது கொப்பிகளை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும் என்பது சம்பந்தமாகவும் அவர்களுக்கு பாடசாலையில் இருந்து வீட்டு வேலைகளாக வழங்கப்படுகின்ற வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஊக்கப்படுத்துவதோடு, ஒரு சில பெற்றோர் ஆண் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது வேலைக்கு அனுப்பியுள்ளார்கள். இது சிறுவர் துஷ்பிரயோகமாக கணிக்கப்படுகிறது என்பது சம்பந்தமாகவும் சில பெற்றோர்கள் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பி, பின்னேரத்தில் அவர்கள் கடையில் வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதாவது மாலை 03 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை கடைகளில் மற்றும் தொழிற்சாலைகளில் அமர்த்தி, தொழில் செய்ய விடுகின்றார்கள்; தொழிலுக்கு அனுப்புகின்றார்கள். இவையெல்லாம் ஒரு வகையான சிறுவர் துஷ்பிரயோகம் எனவும் பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வருகை தந்த பெற்றோர்களும் இதனை ஏற்றுக் கொண்டு இனி வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிபடக்கூறியதுடன் இந்த கூட்டத்துக்கு வருகை தராத அநேகமான பெற்றோர்களே இவ்வாறு செய்வதாகவும் வருகை தந்திருந்த பெற்றோர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்வி பணிமனையின் சமாதான இணைப்பாளர் ரசீன், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் அஸ்மா மலிக் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button