ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் அதிரடி மாற்றம்.?

பல ஆண்டுகளாக நிதிச் சுமைகள் மற்றும் நிர்வாக சவால்களை எதிர்கொண்டு வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள், நிதி நிலை மற்றும் நீண்டகால வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் குழுவுக்கு டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய தலைமை தாங்கவுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல், முதலீட்டு வங்கியியல் நிபுணர் துமித் பெர்னாண்டோ உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் இடம்பெறவுள்ளனர்.
அத்துடன், நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, சிவில் வானூர்தி சேவைகள் அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் சட்ட மற்றும் விமானப் போக்குவரத்து துறை நிபுணர்களும் இணைந்து செயல்படவுள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேசிய விமான சேவையின் செயல்திறன், நிதி நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது இந்தக் குழுவின் பிரதான பொறுப்பாகும்.
அரசாங்கத்தின் நீண்டகால நிதிச் சுமையைக் குறைத்து, வர்த்தக ரீதியாக இலாபகரமான மற்றும் நிலையான தேசிய விமான சேவையை உருவாக்குவதே இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
இந்த விசேட குழு, மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை அல்லது அரசாங்கம் வேறு தீர்மானம் எடுக்கும் வரை தொடர்ந்து செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




