Sri Lanka News

நாட்டில் தொடரும் மோசமான வானிலை… 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய மோசமான வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாவட்டங்களில் 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

குறித்த உயிரிழப்பு சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையம் நேற்று இரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நான்கு மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலாளர் பிரிவுகள் கடும் மழை மற்றும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 62 குடும்பங்களை சேர்ந்த 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 39 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மழை தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இலங்கைக்கு அருகில் உருவாகியுள்ள தாழழுத்த நிலை காரணமாக மழை நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், பலத்த மழை, காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button