பொது ஆவணம் தாயாரிக்க பத்துப் பேர் கொண்ட குழு! – தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது சந்திப்பில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இந்த விடயத்தை ஒட்டி கட்சிகள் எல்லாவற்றினாலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிக்காக சட்டத்துறையினர் ஐவரையும், கட்சிகளின் ஐந்து பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று சட்டத்தரணிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், சட்டத்துறையில் புலமைமிக்க செல்வகுமாரன், தமிழ்மாறன், குருபரன் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரும் பேராதனை பல்கலைக்கழக அரசியல் கற்கைகள் விரிவுரையாளரும் சட்டத்தரணிமான கலாநிதி சிவகுமார் ஆகியோர் இந்த விடயங்களை கையாள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதேசமயம் இந்தக் குழுவினரோடு தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பேரவை ஆகிய நான்கில் சார்பிலும் தலா ஒவ்வொருவரும், அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியால் நியமிக்கப்படும் ஒருவரும் என ஐந்து பேர் சேர்ந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நேற்று பங்குபற்ற விரும்பிய சில தரப்புகள் இணையவழி இணைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போதிலும், இது மூடிய அறையில் நடைபெறும் கூட்டம் என்ற பின்புலத்தில் இணையவழி இணைப்புக்கு இடம் அளிக்க கூடாது என ஆட்சேபிக்கப்பட்டது.
அந்த ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப்பட்டதனால் இணையவழியில் யாரையும் இணைப்பதற்கான இணக்கம் ஏற்படவில்லை.
கட்சிகள் தங்கள் சார்பில் பங்குபற்றும் மேற்படி ஐந்து பிரதிநிதிகளையும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு அறிவித்ததும், பேரவை மேற்படி ஐந்து சட்ட விற்பனர்களையும் ஒன்றிணைத்து அடுத்த கூட்டத்தை விரைவில் கூட்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட ஆவணம் தயாரான பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஒன்று கூட்டப்படும் கூட்டத்தில் அந்த ஆவணத்தை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றைய கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.




