Sri Lanka News

சுற்றுலா புகைப்படங்களை உடனுக்குடன் பகிர வேண்டாம்..! மக்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை

சித்திரைப் புத்தாண்டு மற்றும் விடுமுறை காலங்களில் இடம்பெறக்கூடிய கொள்ளைச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் ‘செல்பி’ (Selfie) புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

இவ்வாறான பதிவுகள் மூலம் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதைத் திருடர்களுக்கு நீங்களே தெரியப்படுத்துவதாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டுச் செல்லும் போது, அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கோ அல்லது கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவருக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.சி.சி.டி.வி (CCTV) கேமராக்கள் மற்றும் அபாய எச்சரிக்கை மணிகள் (Alarms) சரியாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊடுருவல்களைத் தடுக்க வீட்டின் வெளிப்புறங்களில் போதுமான அளவு மின்விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:

பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் மற்றும் குடும்ப விபரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய பணியாளர்கள் குறித்த விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

நகை மற்றும் பணத்தைப் பாதுகாப்பான இடங்களில் வைப்பதுடன், பணியாளர்களை வீடுகளில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாகப் பலர் ஜன்னல்களைத் திறந்து வைத்து உறங்குகின்றனர்.

இது திருடர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்பதால், ஜன்னல்களில் பாதுகாப்பான உலோகக் கம்பிகள் (Grills) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு முன் அனைத்துக் கதவுகளும் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் தங்கத்தின் விலை உயர்வு காரணமாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button