World News

வளைகுடா நாட்டு தலைவர்களுடன் டிரம்ப் திடீர் தொலைப்பேசி உரையாடல்!

வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்தவாறு, ஈரான் விவகாரம் மற்றும் பிராந்திய அமைதி உடன்படிக்கை தொடர்பாக பல்வேறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் தான் ஒரு முக்கிய தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டுத் தொலைபேசி உரையாடலில் சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி முகமது பின் சையத் அல் நஹ்யான், கட்டாரின் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானி, பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி மற்றும் அமைச்சர் அலி அல்-தவாடி, பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் அகமது ஷா , துருக்கி ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன், எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா அல்-சிசி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபா ஆகிய உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஈரான் குடியரசு மற்றும் அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) குறித்தே இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இது தொடர்பாக டிரம்ப் மேலும் தெரிவிக்கையில்:அமெரிக்கா, ஈரான் மற்றும் பட்டியலில் உள்ள ஏனைய நாடுகளுக்கு இடையிலான இந்த அமைதி உடன்படிக்கை பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டு விவாதத்திற்கு புறம்பாக, இஸ்ரேல் பிரதமர் பிஞ்சமின் நெதன்யாகுவுடனும் தான் தனியாகப் பேசியதாகவும், அந்த உரையாடலும் மிகவும் சுமுகமாக அமைந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையின் பல முக்கிய அம்சங்களில் ஒன்றாக, சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ‘ஹோர்முஸ் நீரிணை’ மீண்டும் திறந்து விடப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் இறுதி வடிவங்கள் மற்றும் முழுமையான விபரங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவை மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button