Sri Lanka News

பொலிஸ் தடுப்புக்காவலில் கைதியொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், நேற்று இரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுணதீவு பொலிஸ் குழுவொன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த நபர் மதுபானம் அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் அவரது மனைவியால் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டிற்கு அமைய, வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்காகக் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சற்று நேரத்தில் மயக்கமடைந்ததாகவும், அதனையடுத்து அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், குறித்த நபர் பொலிஸாரால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவரின் தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவரது சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button