Sri Lanka News

நாட்டில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்புநாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பல மாகாணங்களில் தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அனுராதபுர மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம் மற்றும் திடீர் பலத்த காற்றால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button