Sri Lanka News

கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்களுக்கு தீர்வு, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

அரசினால் நியமிக்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் கல்வி அமைச்சின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கத்தோலிக்க சபையின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

​இக்கலந்துரையாடலில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன,

​அரசினால் நியமிக்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாக சிக்கல்கள்.
​கத்தோலிக்கக் கோட்பாடுகளை (Catholic Doctrine) கற்பிப்பதற்கான ஆசிரியர் குழு முறையொன்றை உருவாக்குதல்.
​ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்க சகோதரிகள் (Sisters) மற்றும் துறவிகளை (Fathers) இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம்.

​கல்வி அமைச்சின் ஆதரவை முறையாகப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குதல்,

​அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

​இதன்போது, கத்தோலிக்க சபையுடனான இந்த கலந்துரையாடலை ஆண்டிற்கு மூன்று முறை நடத்துவதற்கும், இதற்கான செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் திரு. ரொஷான் கமகே அவர்களை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

​இந்தச் சந்திப்பிற்கு வழிவகை செய்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு கத்தோலிக்க சபை சார்பில் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

​”அனைத்து மாணவர்களும் எவ்வித பாகுபாடுமின்றி தத்தமது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உறுதிசெய்வதே தனது எதிர்பார்ப்பு என்றும், கல்வித்துறையில் இந்தச் சூழல் தொடர்ந்து பேணப்பட வேண்டும்” என்றும் கர்தினால் ஆண்டகை இங்கு சுட்டிக்காட்டினார்.

​இந்நிகழ்வில் அதிவணக்கத்திற்குரிய ஹரோல்ட் அந்தனி பெரேரா ஆண்டகை, அதிவணக்கத்திற்குரிய கிறிஸ்டி நோயல் இம்மானுவேல் ஆண்டகை, அதிவணக்கத்திற்குரிய அன்டன் ரஞ்சித் ஆண்டகை, அதிவணக்கத்திற்குரிய விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவேவ உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

க.டினேஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button