மோடி – மெலோனி ‘மெலடி’ வீடியோவால் ஏற்பட்ட குழப்பம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை இணைத்து இணையத்தில் பரவிய ‘மெலடி’ (Melody) மிட்டாய் குறித்த வீடியோ காரணமாக, இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் உயர்வடைந்துள்ளன.
இதில் மிகவும் விந்தையான விஷயம் என்னவென்றால், இந்த விலை உயர்வுக்குக் காரணமான புகழ்பெற்ற ‘மெலடி’ மிட்டாய் உட்பட பல பிரபலமான உணவுப் பொருட்களைத் தயாரிப்பது ‘பார்லே புராடக்ட்ஸ்’ (Parle Products) என்ற பொதுவெளியில் பட்டியலிடப்படாத நிறுவனமாகும்.பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்திற்கும், இந்த மிட்டாயைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் இடையே எந்தவொரு வணிகரீதியான தொடர்பும் இல்லை என்பதுடன், அது வெறும் பெயரில் மட்டுமே ஒற்றுமையைக் கொண்ட வேறொரு நிறுவனமாகும். எனினும், முதலீட்டாளர்கள் பெயரிலுள்ள ஒற்றுமை காரணமாகத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முண்டியடித்துள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியப் பிரதமருக்கு ‘பார்லே மெலடி’ மிட்டாய் பாக்கெட் ஒன்றை பரிசாக வழங்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு ஒன்று கடந்த புதன்கிழமை இணையம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
இதனுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் காரணமாக, முதலீட்டாளர்கள் ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகளை பெருமளவில் வாங்கத் தொடங்கினர்.
இதனால் அன்றைய தினமே அந்நிறுவனத்தின் பங்கு விலை 5% என்ற அதன் உச்சவரம்பை எட்டியது.இந்த நிலைமை இன்றும் (21) தொடர்ந்ததுடன், இன்றும் பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை மீண்டும் ஒருமுறை 5% உச்சவரம்பைப் பதிவு செய்தது.
இதன்படி, புதன்கிழமையன்று 5.25 இந்திய ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலை, வியாழக்கிழமை ஆகும்போது 5.51 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒட்டுமொத்தமாக 10% வளர்ச்சியைத் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




