India NewsSri Lanka News

இந்திய சீனி ஏற்றுமதித் தடையால் இலங்கைக்கு மாற்று ஏற்பாடு

இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, பிரேசில் உள்ளிட்ட மாற்று நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய சந்தை நிலவரம் குறித்து அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில் கடந்த மே 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஏற்றுமதித் தடையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

தற்போதைய தடையின் காரணமாக, பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய நாடுகளிலிருந்து சீனி இருப்புகளை விரைவாக இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாலும், தற்போது நாட்டிற்குள் போதுமான அளவு சீனி கையிருப்பு உள்ளதாலும் சந்தையில் சீனிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என சங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

தற்போது உள்நாட்டுச் சந்தையில் சீனி விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமைக்கு இந்திய சீனி ஏற்றுமதித் தடை காரணம் அல்ல என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button