World News

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலியான உயிர்கள்; பலர் வெளியேற்றம்

சீனாவின் தென்மேற்கு பகுதியான குவாங்சி (Guangxi) மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 5.2 மெக்னிடியூட்டாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

அனர்த்தத்தை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 7,000க்கும் அதிகமான பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக நகர்த்தியுள்ளனர்.

இந்த நில அதிர்வின் வீரியம் காரணமாகப் பல கட்டடங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இதில் 13 கட்டடங்கள் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகச் சீன தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் எவரேனும் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கம் காரணமாகப் பிராந்தியத்தின் உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தொடருந்து பாதைகளின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் காரணமாகத் தொடருந்து போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும், சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் எனவும் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button