World News

ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில்

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவது ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதிலைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் பல விடயங்களில் இணக்கப்பாட்டிற்கு வராததே இதற்குக் காரணமாகும்.

அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல், போர்க்கால இழப்பீடுகளை வழங்குதல், அமெரிக்காவின் கடற்படை முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டுவருதல், மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதத்தை அளித்தல் மற்றும் ஈரான் மீண்டும் எண்ணெய் விற்பனையைத் தொடங்குதல் போன்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை கொண்டு செல்லும், தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையின் இறையாண்மை குறித்தும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த போர்நிறுத்தத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஈரானின் இந்தப் பதில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா முன்மொழிந்திருந்தது.

இதேவேளை, பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதன் காரணமாக, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 3% அதிகரித்து, ஒரு பீப்பாய் 104 டொலர்களைத் தாண்டியுள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்குவதற்கு முன்னர், உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பகுதி இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், இது மோதலின் முக்கிய அழுத்தப் புள்ளியாக மாறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button