News

இலங்கையைச் சூழும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாளை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால், நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் பனியுடனான வானிலை நிலவக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழவுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது திசை மாற்றமின்றியும் வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20-30 கிலோமீற்றர் வரை காணப்படும். நாட்டை சூழவுள்ள கடல் பகுதிகள் சாதாரண நிலையில் இருந்து ஓரளவுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், அக் கடல் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டம் பசறை பிரதேச செயலகப் பிரிவு. மொனராகலை மாவட்டம் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகள். இந்த முன்னெச்சரிக்கையானது இன்று இரவு 9 மணிவரை அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான மழை பெய்யும் பட்சத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிகமாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button