Sports

கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் – புதிய நடைமுறை?

வீரர்களின் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் சர்வதேச தொடர்களுக்கான கொடுப்பனவு முறையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரர்களின் திறனை ஊக்குவிப்பதையும் வெற்றிகளைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, புதிய போனஸ் முறைகள் மற்றும் சம்பளக் குறைப்பு விதிகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, இனிவரும் காலங்களில் தொடர் வெற்றிகளுக்கான போனஸ் தொகையானது, தரவரிசையில் முதல் 4 இடங்களிலுள்ள அணிகளுக்கு எதிராக வெற்றிபெறும் தொடர்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் தரவரிசையில் முதல் 9 இடங்களிலுள்ள அணிகளுக்கு எதிரான தொடர் வெற்றிகளுக்கு போனஸ் வழங்கப்பட்டது.

அதேபோல் டெஸ்ட், ஒருநாள் அல்லது இருபதுக்கு-20 என எந்தவொரு போட்டி வடிவத்திலான தொடரில் தோல்வியடைந்தால், அந்தத் தொடருக்கான போட்டி ஊதியத்திலிருந்து 10% தொகை குறைக்கப்படவுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் இடம்பெறும் தொடர்களின் போது பெறும் வெற்றிகளுக்கு முழுமையான போனஸ் வழங்கப்படும் அதேவேளை, உள்நாட்டில் பெறும் வெற்றிகளுக்கான போனஸ் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இருபதுக்கு-20 தொடர்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறும் வெற்றிகளுக்கு சமமான போனஸ் வழங்கப்படும்.

சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள டெஸ்ட் அணியைத் தோற்கடித்தால், கூட்டு போனஸ் தொகையாக 150,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும். 2-வது, 3-வது மற்றும் 4-வது இடங்களிலுள்ள அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கு முறையே 100,000, 75,000 மற்றும் 60,000 அமெரிக்க டொலர்கள் என குறைந்து செல்லும் வரிசையில் போனஸ் வழங்கப்படும்.

முதலிடத்திலுள்ள அணியைத் தோற்கடித்தால்:

டெஸ்ட்: வெளிநாட்டில் – 150,000 அ.டொ உள்நாட்டில் – 100,000 அ.டொ ஒருநாள்: வெளிநாட்டில் – 150,000 அ.டொ உள்நாட்டில் – 75,000 அ.டொ இருபதுக்கு-20: உள்நாடு அல்லது வெளிநாடு என எவ்விடத்திலும் முதலிட அணியை வென்றால் 75,000 அ.டொ. ஒவ்வொரு போட்டிக்காகவும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்: டெஸ்ட்: வெற்றிக்கு – 15,000 அ.டொ சமநிலை (Draw) – 10,000 அ.டொ தோல்வி கைவிடப்பட்ட போட்டிக்கு – 7,500 அ.டொ. ஒருநாள்: வெற்றிக்கு – 7,500 அ.டொ தோல்விக்கு – 3,500 அ.டொ கைவிடப்பட்ட போட்டிக்கு – 3,000 அ.டொ. இருபதுக்கு-20: வெற்றிக்கு – 5,000 அ.டொ தோல்விக்கு – 2,500 அ.டொ கைவிடப்பட்ட போட்டிக்கு – 2,000 அ.டொ. தலைவர்களுக்கான விசேட கொடுப்பனவு: தலைமைத்துவப் பொறுப்பைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு போட்டியிலும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும். எனினும், போட்டி முழுவதும் களத்தில் இருந்தால் மாத்திரமே இது வழங்கப்படும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள்: ஒரு போட்டிக்கு மேலதிகமாக 1,000 அ.டொ. இருபதுக்கு-20: ஒரு போட்டிக்கு மேலதிகமாக 500 அ.டொ. தனிப்பட்ட திறமைகளுக்கான ஊக்கத்தொகை (ICC தரவரிசைப்படி)

எந்தவொரு போட்டி வடிவிலும் உலகின் முதலிட வீரரானால் – 25,000 அ.டொ (ஒருமுறை மாத்திரம்). உலகத் தரவரிசையில் 2 முதல் 5 இடங்களுக்குள் வந்தால் – 20,000 அ.டொ (ஒருமுறை மாத்திரம்). இதுதவிர, வருடாந்த ஒப்பந்தத் தொகை, பயணக் கொடுப்பனவு, நாளாந்தப் படி மற்றும் அனுசரணையாளர் பங்களிப்பு ஊடாக மேலதிக கொடுப்பனவுகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, புதிய கொடுப்பனவு முறைமை குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button