Sri Lanka News

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள்; அறிமுகமாகும் புதிய நடைமுறை!

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அரச நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் திணைக்கள அதிகாரிகள் இந்தத் தகவலை அண்மையில் வெளியிட்டனர்.

தற்போது நடைமுறையிலுள்ள கணினி அமைப்பு மிகவும் பழமையானது என்றும், அதில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர்.

எனவே, தற்போதுள்ள கணினி அமைப்பை நவீனமயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள கணினி அமைப்பு புதுப்பிக்கப்பட்ட பின்னர், ஆறு மாத காலத்திற்குள் இந்த விசேட திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட இலக்கத் தகடுகளை முன்பதிவு செய்வதற்காக 100,000 ரூபா முதல் 1 மில்லியன் ரூபா வரை கட்டணம் அறவிடப்படுகிறது. ஏற்கனவே சிலர் ஒரு மில்லியன் ரூபா செலுத்தி இவ்வாறான இலக்கத் தகடுகளைப் பெற்றுள்ளனர்.

விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தரவுகளை முன்வைத்தனர்.

அதன்படி,2023ஆம் ஆன்டில் 11 வாகனங்களும்,2024ஆம் ஆண்டில் 46 வாகனங்களும்,2025ஆம் ஆண்டில் 692 வாகனங்களும் விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இதேவேளை 2026 ஏப்ரல் 17 ஆம் திகதி வரை 436 நபர்கள் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இலக்கத் தகடுகளை முன்பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 1,185 வாகனங்கள் இவ்வாறான விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுள்ளமை அல்லது முன்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இந்த முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனப் பதிவு எண்களைத் தனிப்பயனாக்கிக் கொள்ளும் விருப்பத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button